செவ்வாய், 17 நவம்பர், 2020

கட்டாய திருமண பதிவுச்சட்டம் சொல்வது என்ன ?



                 
     திருமணங்களை செய்யக்கூடியவர்கள் அதை முறையாக பதிவு செய்வதில்லை.அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களிடம் இந்த விஷயத்தில் போதிய விழிப்புணர்வு இல்லை.  இதனால் கணவரின் இறப்புக்கு பின்னால் உள்ள  சட்டரீதியான உரிமைகளை மனைவியும் பிள்ளைகளும் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.


 உச்ச நீதிமன்றம் அளித்த சீமா -எதிர்-அஸ்வினிகுமார் (2006 (2) SCC 578) என்ற வழக்கின் தீர்ப்பில்,திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டும் என்று உத்தரவிட்டது.
 அதன்படி மாநிலஅரசாங்கங்கள் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கருத்து தெரிவித்தது இதனால் தமிழ்நாட்டிலும் கட்டாய திருமண பதிவுச்சட்டம் கொண்டுவரப்பட்டு, 2009 ஆம் ஆண்டு,நவம்பர் 24 ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்குவந்தது..


மேற்சொன்ன தேதியிலிருந்து எந்த திருமணம்  தமிழ்நாட்டில் நடந்திருந்தாலும், அது எந்தமதத்தைச் சேர்ந்த திருமணமாக இருந்தாலும், மற்றசட்டங்களின் கீழ் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டிருந்தாலும், Tamil Nadu Registration of Marriage Act, 2009  சட்டத்தின் கீழ் கட்டாயம் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.


இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்படுகிறதா?


 இந்த சட்டப்படி பதிவுத்திருமணம் செய்ய சொல்லி அரசு சட்டமியிற்றி உள்ளதாகவும் இதனால் மதசுதந்திரம் பறிக்கப்படுவதாகவும்  சில இஸ்லாமிய இயக்கங்கள் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பதிவுத்திருமணம் என்பது வேறு, திருமணத்தை பதிவு செய்வது என்பது வேறு இந்த சட்டப்படி அவரவர் மதம் சார்ந்த வழக்கப்படி திருமணம் செய்துகொள்ள எந்த தடையுமில்லை. நாம் செய்த திருமணத்தை குறிப்பிட்ட நாளுக்குள் முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என்றுதான் இந்த சட்டம் சொல்கிறது. இதனால் ஏமாற்றி பல திருமணங்கள்  செய்யும் போலிகள் தடுக்கப்படலாம்.


 எங்கே பதிவு செய்வது?


 உங்கள் திருமணம் எந்தசார் பதிவாளர் அலுவலகத்தின் (Sub Registrar Office) எல்லை வரம்புக்குஉட்பட்ட இடத்தில் நடந்ததோ, அந்த அலுவலகத்தில்பதிவு செய்யவேண்டும்.
திருமணம் நடைபெற்ற தேதியிலிருந்து 90 நாட்களுக்குள், திருமணத்தைப் பதிவு செய்யவேண்டும். பதிவுக்கான கட்டணம் 100 ரூபாய். 90 நாட்களுக்குள் திருமணத்தைப் பதிவு செய்யமுடியாதவர்கள், அடுத்த 60 நாட்களுக்குள் கூடுதல்கட்டணம் செலுத்தி (ரூபாய் 150), பதிவு செய்துகொள்ள வேண்டும்.
திருமணத்தை பதிவு செய்வதற்கு தனியே படிவங்கள் இருக்கின்றன. இந்தப் படிவம் சார்பாதிவாளர் அலுவலகத்தில் கிடைக்கும்.  அல்லது நமது இணையதள லின்க்கில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் படிவம் I குறிப்பாவணத்தை பூர்த்தி செய்து, கூடவே திருமணத்தைப் பதிவுசெய்வதற்கான படிவம் II மனுவை இணைத்து, சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தாக்கல் செய்யவேண்டும்.படிவத்தில் கணவன், மனைவி இருவரது புகைப்படங்களையும் ஒட்ட வேண்டும். கூடவே தம்பதியின் மற்றொரு புகைப்படத்தையும் இணைக்கவேண்டும்.
மேலும், தம்பதியின் வீட்டு விலாசத்துக்கானஅத்தாட்சி, அடையாள அத்தாட்சி (Identity Proof)ஆகியவற்றின் நகல்களையும் வைக்கவேண்டும்.திருமண அழைப்பிதழையும் உடன் இணைக்கவேண்டும். திருமணத்தை நடத்திவைத்த மத குருமாரும் கையொப்பமிடவேண்டும்.


டவுன் காஜி சான்று அவசியமா?


இஸ்லாமியர்கள் திருமணப்பதிவு செய்வதாக இருந்தால்  மதகுருவின் கையொப்பம் என்ற இடத்தில் டவுன் காஜி கையொப்பமிட்டு அதற்கு சான்று அளிக்கவேண்டும் என்று சில சார்பதிவாளர் அலுவலகங்களில் முஸ்லிம்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
ஆனால் மதகுரு என்ற இடத்தில் திருமணத்தை நடத்திவைக்கும் இமாம் கையொப்பமிட்டால் போதுமானது டவுன் காஜி கையொப்பம் தேவையில்லை என்ற விபரங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நாம் பெற்றுள்ளோம் . அதற்கான நகல் பதிவிறக்கம் செய்ய  லின்க் ....  என்ற நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதகுருமாரைத் தவிர, வேறு இரு நபர்களும் மனுவில் சாட்சி கையெழுத்து போடவேண்டும்.மேலும், திருமணத்துக்காக வரதட்சணை எதுவும் கேட்கப்படவில்லை, கொடுக்கப்படவில்லை,வாங்கப்படவில்லை என்றும் (இந்த விவரம்படிவத்திலேயே காணப்படுகிறது) உறுதி அளிக்கவேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவுசெய்யவில்லை என்றால் அது சட்டப்படி குற்றம் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். என்பதை கவனத்தில்கொண்டு உங்கள் இல்ல திருமணங்களை முறையாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.